ஒபாமா பதவிக் காலத்தில் லண்டனில் வாங்கப்பட்ட அமெரிக்காவுக்கான தூதரகத்தைத் திறந்து வைக்க ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்துவிட்டார். அத்துடன், லண்டனுக்கான தனது பயணத்தையும் இரத்துச் செய்துவிட்டார்.

லண்டனில் ஏற்கனவே இயங்கி வந்த அமெரிக்க தூதரகத்தை விற்றுவிட்டு புதிய தூதரகத்தை வாங்கினார் ஒபாமா. அவரது ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட அந்தக் கட்டடத்தின் திருத்த வேலைகள் நிறைவுற்று திறப்புவிழா காணத் தயாராக இருந்தது.

ஆனால், ஒபாவுடன் சுமுகமான உறவு இல்லாத ட்ரம்ப் இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“பழைய தூதரகக் கட்டடத்தை நிலக்கடலைக்கு விற்றுவிட்டார் ஒபாமா” என்று ட்ரம்ப் கடுமையாகச் சாடியிருந்தார். மேலும் இந்தத் திட்டத்தில் விருப்பமில்லை எனக் கூறி, தூதரகத்தைத் திறந்துவைக்கவும் மறுத்து லண்டனுக்கான பயணத்தையும் இரத்துச் செய்துவிட்டார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் லண்டன் அரசியல்வாதிகள், “ட்ரம்ப் வராதது நல்லதுதான். ஏனென்றால், அவரது வருகையை இங்கு யாரும் விரும்பவில்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அமெரிக்கா - ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள உறவை, ட்ரம்ப் போன்ற கோமாளிகளின் நடவடிக்கைகளுக்காக விட்டுத் தரப் போவதில்லை என்றும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.