பிள்ளைகளின் கல்விக்குத் தடையாக இருந்த மலையைக் குடைந்து எட்டு கிலோ மீற்றர் பாதையை உருவாக்கியிருக்கிறார் ஆதிவாசித் தந்தை!

ஒடிஷாவின் பின்தங்கிய மாவட்டமான புல்பானியின் தொலைதூரக் கிராமம் கும்சாஹி. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால், கிராம மக்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேறிவிட்டனர், ஜலந்தர் நாயக் (44) என்ற ஆதிவாசியைத் தவிர!

படிப்பறிவே இல்லாத நாயக் தனது மூன்று மகன்களையும் கற்பிக்க வேண்டும் என விரும்பினார். எனினும் அதற்குத் தடையாக இருந்தது ஒரு குன்று! அந்தக் குன்றைச் சுற்றி பாடசாலைக்குச் செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பதால் அவரது பிள்ளைகள் பாடசாலை செல்ல மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த நாயக், இரண்டு வருடங்களுக்கு முன் சுத்தியல், இரும்பு உளி மற்றும் மண்வெட்டியுடன் களமிறங்கினார்.

நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் வீதம் இரண்டு வருடம் விடாமுயற்சியாகப் போராடிய நாயக், அண்மையில் தனது கிராமத்துக்கும் பிரதான வீதிக்கும் இடையிலான எட்டு கிலோ மீற்றர் தூரத்தை இணைத்தார்.

இந்தச் செய்தியை பத்திரிகை மூலம் அறிந்த புல்பானி மாவட்ட ஆளுனர், நாயக்கை அழைத்துப் பாராட்டியதுடன், இரண்டு வருடங்கள் அவரது அயராத உழைப்புக்கு சம்பளம் ஒன்றை அரசு சார்பாகப் பெற்றுத் தரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.