எம்.எம்.மின்ஹாஜ்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது வீண் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் என்ன திருட்டு செய்தார்? பிணைமுறி விசாரணைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியது தவறா? அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை ஏன் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவில்லை? தமக்கு சாதகமானவற்றை மாத்திரமே பிரபலப்படுத்திவிட்டு ஏன் பூரண அறிக்கையை மறைக்க வேண்டும் என சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க கேள்வி எழுப்பினார்.

அத்துடன் அநுராதபுர கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு தரப்பும் திருடர்கள் என கூறியுள்ளார். தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது வீணான முறையில் திருட்டு பட்டம் சூட்டப்படுகின்றது. அவர் என்ன திருடினார்.? பிரதமர் என்ன செய்தார்? மத்திய வங்கி பிணைமுறி குற்றச்சாட்டு வந்தவுடன் அதனை உரிய முறையில் விசாரணை செய்வதற்கு இடமளித்தார். தற்போது 11 பில்லியன் ரூபா அரசுடைமையாக்குவதாக அவர் கூறிவிட்டார். அப்படியாயின் அவர் என்ன திருட்டு செய்தார். திருட்டை பிடிக்கவே அவர் முயற்சி செய்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய தொகுதிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.