அசைவ உணவு உண்ண மனைவி அனுமதிக்காததால் வைத்தியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் லக்னோவில் இடம்பெற்றுள்ளது.

உமாஷங்கர் என்ற இந்த வைத்தியர் அசைவப் பிரியர். வரித் திணைக்களத்தில் பணியாற்றும் அவரது மனைவியோ கடவுள் பக்தி மிகுந்தவர்.

இந்த நிலையில், நேற்று (11) வியாழக்கிழமை இரவு உணவுக்கு அசைவ உணவைத் தயாரிக்குமாறு உமாஷங்கர் கேட்டுள்ளார். ஆனால், வியாழக்கிழமைகளில் அசைவ உணவு உண்ணக் கூடாது என்று அவரது மனைவி ஒரேயடியாக மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

உணவு மேசையை விட்டு எழுந்த உமாஷங்கர் நேரே தன் அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டார். எவ்வித சந்தேகமும் கொள்ளாத அவரது மனைவி, வீட்டு வேலை முடித்தபின் தனியே உறங்கச் சென்றுவிட்டார்.

விடிந்ததும் கணவரை எழுப்ப அவரது அறைக்குச் சென்றபோதே அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியிருக்கிறார்.

உமாஷங்கரின் மரணம் குறித்து பொலிஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.