பாகிஸ்தானில் 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மணதளவில் பாதிப்படைந்த ஊடகவியலாளராக  பணி புரியும் தாய் செய்தி வாசிக்கும்போது தனது சின்னச்சிறு மகளை மடியில் அமரவைத்துபடியே செய்தியை வாசித்துள்ளார்.

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

பாகிஸ்தானின் "சமா"தொலைக்காட்சியில்  செய்தியாளராக பணிபுரியும் கிரண் நாஸ் செய்தியை வாசிக்கத் தொடங்கியபோது,

"நான் இன்று வெறும் கிரண் நாஸ் இல்லை, நான் ஒரு தாய், 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டிருக்கிறார். இது மனிதநேயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை. இது இந்த அரசாங்கத்தின் இயலாமையை உணர்த்துகிறது" என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 5 ஆம் திகதி  குர்-ஆன் ஓதும் வகுப்பிற்கு சென்றவர் இரண்டு நாட்களுக்குப் பின் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இச் சம்பவத்தின் பின்னணியில் சீரியல் கொலைகாரன் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அம்மாவட்டத்தில் நீதி கேட்டு மக்கள் தொடர்ந்து தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க பொலிஸார் தடியடி நடத்தியும் அங்கு போராட்டங்கள் ஓயவில்லை. பொலிஸாரின் அலட்சியமே இச் சம்பவத்துக்கு காரணம் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

சிறுமியின் தந்தை முகமது அமின் கூறும்போது,

"போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேகத்தை எனது மகளை மீட்பதில் காட்டியிருந்தால் அவள் உயிருடன் இருந்திருப்பாள்" என வேதனை தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு  பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய நபரை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு இராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும் உதவவேண்டும் என பாகிஸ்தான் இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாகாணத்திலிருந்து இயங்கும் சாஹில் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமானது பஞ்சாப் மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர் என்றும் கடந்த ஆண்டு மட்டும் 4,139 சம்பவங்கள் நடந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.