ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தி சிறிவில்லிப்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசிய கவிஞர் வைரமுத்து, கோவில் சன்னதியில் பக்தர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறிவில்லிபுத்துாரில் மடாதிபதிகள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதன் போது மணவாள முனிகள் மடத்தின் சடகோபராமானுஜ ஜீயர், திருகோஷ்டியூர் மாதவன், ஆண்டாள் சொக்கலிங்கம், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில துணை செயலாளர் கோவிந்தன், பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகி சரவணதுரை  ஆகியோருடன் ஏராளமான பக்தர்களும், ஆன்மீக அன்பர்களும் கலந்து கொண்டனர்.  20 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. இதனைத் தொடர்ந்து ஜீயர் தலைமையில் உண்ணாவிரதமும் தொடங்கியது. பின்னர் இவர்களிடம் கோயிலின் தக்கார், மற்றும் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஜனவரி 17 ஆம் திகதிக்குள் வைரமுத்து நேரில் இங்கு வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். என ஜீயர் தெரிவித்ததையடுத்து உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது.

இதனிடையே ‘தமிழை ஆண்டாள்‘ என்ற பெயரில் நடைபெற்ற விழாவில் ஆண்டாள் குறித்து, கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. மடாதிபதிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு கவிஞர் வைரமுத்து அறிக்கை மூலம் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்