தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் இடம்பெற்ற கப்பல் மற்றும் படகு விபத்தில் உயிரிழந்த இரு மீனவர்களின் குடும்பங்களுக்கும்  தலா ஒரு மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்க மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த இரு மீனவர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கான புலமைப் பரிசில் மற்றும் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்கவும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தீர்மானித்துள்ளது. 

கடந்த 9 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் தெய்வேந்திரா முனைப் பகுதி கடற்பரப்பில் வாகனங்களை ஏற்றிச்சென்ற கப்பலொன்றுடன் 6 மீனவர்கள் பயணித்த மீன்பிடிப்படகொன்று மோதி விபத்திற்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே இரு மீனவர்கள் உயரிழந்தனர். இந்நிலையில் குறித்த மீனவர்களின் குடும்பங்களுக்கே இவ்வாறு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.