பாதாள உலக கும்பலைச் சேர்ந்த எஸ்.எஃப்.பண்டாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், அனுராதபுரத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரை பொலிஸார் இன்று (11) கைது செய்தனர்.

குறித்த வர்த்தகர், சில மாதங்களுக்கு முன், இளம் பெண் ஒருவருடன் அந்தரங்கமாக இருந்த நிலையில், அங்கு வந்த பண்டா அவரது குற்றங்களைப் பட்டியலிட்டு மிரட்டியுள்ளார். அவற்றுக்கான ஆதாரங்களும் தன் வசமிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான காணொளி, தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் ஒளிபரப்பானது.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 30ஆம் திகதி, பண்டா தன் அடியாட்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

திரப்பன காட்டுப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பண்டா மற்றும் அவரது அடியாட்கள் இருவர் கொல்லப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், குறித்த காட்டுப் பகுதியில் வைத்து டி-56 ரக இயந்திரத் துப்பாக்கியால் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட வேட்டுக்களை பண்டாவின் கார் மீது பிரயோகித்திருந்தார்.

இது குறித்த ஆரம்ப விசாரணைகளை திரப்பன பொலிஸார் நடத்தியிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது. 

விசாரணையில், குறித்த வர்த்தகரிடம் முன்னைய சம்பவம் தொடர்பில் பாரிய தொகையை பண்டா கப்பமாகப் பெற முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்தே வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.