கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் நாட்டுப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தடையையும் மீறி செல்வோம் என தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 , 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்காக  இந்திய பக்தர்களுக்கு யாழ்மறைமாவட்ட குருமுதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை இம்முறை கச்சதீவு திருவிழாவில் பங்கேற்பதற்கு தமிழ்நாட்டிலிருந்து செல்வதற்கு 60 விசைப்படகுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகில இந்திய பாரம்பரிய மீனவர்சங்க தலைவர் சின்னத்தம்பி,

“பாரம்பரியமாக கச்சதீவு திருவிழாவிற்கு நாட்டுப் படகுகளில்தான் இறைபயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது வணிக நோக்கில் விசைப் படகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக எமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு திருவிழாவில் கலந்துகொளவதற்காக நீதிமன்றில் அனுமதி பெற்றிருந்தோம். ஆனாலும் பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததால் விழாவை புறக்கணித்து நாம் செல்லவில்லை. எனவே இவ்வாண்டு அனுமதி மறுக்கப்பட்டாலும் தடையை மீறி திருவிழாவுக்கு செல்வோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை இராமேஸ்வரம், வேர்கோடு பங்குதந்தை அந்தோனிசாமி தெரிவிக்கையில்,

"கச்சதீவு செல்லும் பக்தர்கள் இறைப் பயணமாக மாத்திரமே செல்ல வேண்டும். வர்த்தக நோக்கத்துடன் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லவோ கூடாது" என வலியுறுத்தியுள்ளார்.

 விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.