கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் மற்றும் குருதி அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.போதிய அளவிற்கான விழிப்புணர்வு பெண்களிடத்தில் இல்லாததே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவத்துறையினர்.

பெண்கள் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் குடும்ப சூழல், பொருளாதார சூழல் மற்றும் போதிய மருத்துவ விழிப்புணர்வின்மை  ஆகிய காரணங்களால் அந்த காலகட்டத்தில் தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்வதில்லை. அத்துடன் தங்களின் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால உடல் நலம் குறித்து அறிந்து கொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை. ஆனால் உரிய பரிசோதனைகள் எடுத்தால் அவர்களும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி காத்திட இயலும்.

தெற்காசியாவில் பெண்கள் பிரசவிக்கும் தருணங்களில் பச்சிளங்குழந்தைகள் இறப்பது மற்றும் பெண்கள் மரணமடைவது என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது என்றாலும், முறையான விழிப்புணர்வைப் பெற்றிருந்தால் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர்.

பெண்கள் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை கர்ப்பக்கால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு எடை கூடிய குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு உருவாகிறது. சத்துள்ள உணவு, போதிய உடற்பயிற்சி, முறையான மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை பெண்கள் மேற்கொண்டால் இந்த நீரிழிவு மற்றும் குருதி அழுத்த நோயிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இயலும்.

வைத்தியர் : கனகசபை

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்