லண்டனில், பதின்ம வயது சிறுவர்களுக்கு சிகரெட் விற்க மறுத்த இந்திய வம்சாவளி கடை உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விஜய் பட்டேல் (49) என்ற இவ்விந்தியர் ‘மில் ஹில்’ பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு இவரது கடைக்கு வந்த மூன்று சிறுவர்கள் சிகரெட் வாங்க முயன்றுள்ளனர். எனினும் பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு சிகரெட் விற்கக் கூடாது என்ற சட்டம் லண்டனில் இருப்பதைச் சுட்டிக் காட்டிய பட்டேல், அவர்களுக்கு சிகரெட் விற்க மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் மூவரும் பட்டேலைத் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து விழுந்த பட்டேலின் தலை தரையில் வேகமாக மோதியதில் இரத்த இழப்புக்கு உள்ளானார்.

கடைக்கு வெளியே இரத்த வெள்ளத்தில் கிடந்த பட்டேல் அம்பியுலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பட்டேல் சிகிச்சை பெறும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட அவரது குடும்பத்தினர், கொலையாளியைக் கைது செய்ய உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனிடையே, நேற்று (10) நீதிமன்றில் ஆஜரான பதினாறு வயதுச் சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். கொலையுடன் மேலும் இரண்டு சிறுவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவன் தெரிவித்தான்.

அவர்களைத் தேடும் பணியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.