நாட்டின் பொருளாதாரமானது கடந்த வருடத்தில் ஒரு சுமாரான பயணத்தையே மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. அதாவது இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரம் கடந்த வருடத்தில் பாரிய பாதிப்புக்களை சந்தித்திருந்தது. அதேபோன்று தொடர்ந்து நாட்டின் பொருளாதாரமானது கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்படும் விடயங்களும் இங்கு அவதானத்துக்கு உட்படுத்தப்படவேண்டியவையாக உள்ளன.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார குறிகாட்டிகளில் முக்கியமானதாக வேலையின்மை வீதம் காணப்படுகின்றது. வேலையின்மை வீதத்தை வைத்து நாட்டின் பொருளாதாரம் எந்த வகையில் பயணிக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியும். பொருளாதார ரீதியில் செயற்படுநிலையில் உள்ள சனத்தொகையின் அளவைக் கொண்டும் நாட்டின் பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் சனத்தொகையானது 21 மில்லியன்களாக உள்ளது. அதேநேரம் பொருளாதார ரீதியில் செயற்படுநிலையில் உள்ள சனத்தொகையின் எண்ணிக்கையானது சுமார் 82 இலட்சமாக காணப்படுகின்றது.
இது கடந்த 2012 ஆம் ஆண்டின் 74 இலட்சமாக இருந்து படிப்படியாக அதிகரித்து 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் 82 இலட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்திருக்கின்றது. அத்துடன் நாட்டின் தொழில் இன்மை வீதம் 2017ஆம் ஆண்டில் சராசரியாக 4.2 அல்லது 4.3 என்ற வகையில் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் வரை 4 வீதம் 4.4 வீதம், 4.7 வீதம், 4.2 வீதம் என்ற வகையில் சிறியளவிலான வித்தியாசங்களுடன் வேலையின்மை வீதமானது சராசரியாக 4 வீதத்திலிருந்திருக்கிறது.
இந்நிலையில் அண்மையில் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தனியார் துறையில் 50 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நாட்டில் சுமார் 5 இலட்சம் தொழிலாளர்களுக்கான கேள்வி நிலவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
தையல் இயந்திர இயக்குநர்களுக்கு அதிகளவில் வெற்றிடம் காணப்படுவதாகவும், அதற்கு அடுத்ததாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தொழில் வல்லுநர்களின் கேள்வியை நோக்குமிடத்து இயந்திரப் பொறியியல், தொழில்நுட்பவியலாளர்கள், கணக்கியல் தொடர்பான தொழில் வல்லுநர்களுக்கு நாட்டில் பாரிய கேள்வி நிலவுகின்றது.
அந்தவகையில் நாட்டின் தொழில்படையானது 82 இலட்சம் என்ற எண்ணிக்கையில் காணப்படுகின்றது. வேலையின்மை வீதமானது 4.1 வீதமாக இருக்கின்றது. அத்துடன் நாட்டில் சுமார் 5 இலட்சம் தொழில்வாய்ப்புக்கான வெற்றிடங்களும் நிலவுகின்றன. இந்நிலையில் நாட்டின் தொழில்கல்வி மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புக்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் நாம் ஆராயவேண்டி இருக்கிறது.
குறிப்பாக தற்போது இளைஞர்கள் மத்தியில் உயர்கல்வி கற்பதற்கான ஆர்வம் குறைந்து வருவதை காணமுடிகின்றது. கல்விப் பொதுத்தராதர உயர்தரத்திற்குப் பின்னர் இளைஞர்களின் போக்கு உடனடியாக ஏதாவது ஒரு வருமானத்தை தேடிக்கொள்வதாகவே காணப்படுகின்றது.
சுமார் 2 இலட்சம் பேர் கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்கு தோற்றினாலும் அதில் 15 வீதமானவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தனியார் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியை கற்பார்கள். எனினும் இந்த ஏனையவர்கள் தொடர்பில் எவ்வாறான திட்டங்கள் உள்ளன என்பது குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி இன்று தனியார் துறைக்கு ஏற்றவகையில் தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர், யுவதிகளை வேலைக்கு அமர்த்துவது கடினமாக இருக்கின்றது. தொழில்நுட்பம் தெரிந்த தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை எமது நாட்டில் நிலவுவதாகவே கூறலாம். அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த முறையிலான தொழில்கல்வி கட்டமைப்பு காணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
அரசாங்கம் தொழில்நுட்ப கல்வியை கட்டமைத்து பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தாலும் அவை எந்தளவு தூரம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை சென்றடைகின்றன என்பது குறித்து சிந்திக்கவேண்டும். நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் தொழில்நுட்ப அறிவு கொண்ட தொழிலாளர்களை இன்னும் சில வருடங்களில் வெளிநாடுகளிலிருந்து அழைப்பிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்நிலையில் இதுதொடர்பில் எவ்வாறான நடவடிக்கை அவசரமாக எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் எம்முடன் கருத்து பகிர்கையில்
நாட்டின் தொழில்கல்வித்திட்டமானது பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவகையில் உருவாக்கப்படவேண்டியது அவசியமாகும். எனினும் இந்த விடயத்தில் எமது நாட்டில் பாரிய குறைபாடு நிலவுகிறது. எமது நாட்டின் பாடசாலைக்கல்வியானது ஒரு மாணவனைப் பொறுத்தவரையில் 19 வயதிலேயே முடிவடைகின்றது. அதன் பின்னர் பல்கலைக்கல்வி, உயர் கல்வி என 27 வயதின் பின்னரே குறித்த மாணவன் ஒரு தொழிலுக்கு உட்புகவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும்.
பாடசாலை கல்வியானது 16 வயதுடன் முடிவடைய வேண்டும். அதன் பின்னர் 22 அல்லது 23 வயதாகும் போது உயர் கல்வி முடிவடைந்து அந்த மாணவன் தொழிலுக்கு தயாராகவேண்டும். உயர்கல்வியை முடித்துவிட்டு மாணவன் நேரடியாக தொழில் செய்யக்கூடிய நிலைமை காணப்படவேண்டும். எனவே இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கவேண்டியது அவசியமாகும். அதுமட்டுமன்றி தொழில் கல்வியை கற்பதில் மாணவர்கள் மத்தியில் ஆர்வமின்மை காணப்படுகின்றது. அதுதொடர்பாகவும் கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கவேண்டும் என்றார்.
அந்தவகையில் தொழில்நுட்ப அறிவுமிக்க தொழிலாளர் படையை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். நாட்டில் 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் எவ்வளவு புதிய தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆராயப்படவேண்டும். அதுமட்டுமன்றி நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு ஏற்றவகையிலும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கிலும் இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழில்கல்வியை செயற்பாட்டு ரீதியில் நடைமுறைப்படுத்த கொள்கை வகுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM