பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அக்கரபத்தனை ஹோல்மூட் தோட்ட தொழிலாளர்கள்  இன்று மாலை தோட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

"நாள் சம்பளத்திற்கு 18 கிலோ தேயிலை பறிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரைநாள் சம்பளம் வழங்கப்படுகின்றன. வரட்சியான காலநிலையிலும் இவ்வாறு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது.

தேயிலை தோட்டங்கள் காடாக மாறியுள்ளது. தேயிலை கொழுந்து பறிக்க முடியாத நிலையே காணப்டுகின்றன. தேயிலை கொழுந்தினை மாத்திரம் பெற்றுக்கொண்டு தோட்டங்களை காடாக்கி வருகிறது தோட்ட நிர்வாகம். தொழிலாளர்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி செயற்படுகின்றது.

தேயிலை மலைகள் காடாக மாறியுள்ளதால் தேயிலை மலைகளில் சிறுத்தை மற்றும் குளவிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. பலர் குளவிகளின் தாக்குதலுக்கும் சிறுத்தைகளின் தாக்குலுக்கும் இலக்காகி நாளாந்தம் அச்சத்துடனேயே தமது தொழிலை செய்து வருகின்றோம்.

அது மட்டுமல்லாமல் விசப் பூச்சிகள் உட்பட வன விலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்ட வீதிகள் குன்று குழியுமாக காணப்படுகின்றன" என ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

சுமார் 100 இற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தோட்ட நிர்வாகம் இதற்கு உரிய தீர்வு பெற்றுத்தராவிட்டால் மிக விரைவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்போவதாக இவர்கள் எச்சரித்துள்ளனர்.