மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவொன்றை அமைத்து உண்மைகளை கண்டறிய வேண்டும் என தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, குறித்த விவகாரத்தில் அவசரமான எந்தவித நகர்வுகளையும் முன்னெடுக்க முடியாது எனவும் ஊழல் எவ்வாறு இடம்பெற்றது என்ற தெளிவு இல்லாத நிலையில் குற்றவாளிகளை தண்டிக்க இயலாது எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார். 

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை உள்ளடக்கி அண்மையில் விஷேட உரையொன்றை ஜனாதிபதி நிகழ்த்தியிருந்தார்.

இது தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில், மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென சபாநாயகரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து, இன்று காலை கூடிய பாராளுமன்ற நிகழ்வில் மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான 1500 பக்கங்கள் கொண்ட பிணை முறி அறிக்கையை அடுத்தவாரம் பாராளுமன்றில் முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.