ஒவ்வொரு பெண்ணும் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகும்போது அக்குழந்தையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் பல்வேறு கற்பனைகளையும் ஆசைகளையும் வளர்த்துக் கொள்கிறாள்.

அந்தக் குழந்தை ஒரு ஆரோக்கியசாலியாகவும் புத்திசாலியாகவும் வளருவதையே எந்தவொரு தாயும் விரும்புகிறாள்.

இவ்வாறு அக் குழந்தையை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அக் குழந்தைக்கு தாயானவள் கொடுக்கும் உணவு ஆகும்.

எந்தக் குழந்தைக்கும் முதல் உணவு தாய்ப்பால் ஆகும். அது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல போசனைப் பொருட்களையும் சரியான அளவில் வழங்கும்.

குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பாலின் கலவை நாளுக்கு நாள் மாறுபடுவதால் தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்கும் குழந்தைகள் நன்கு வளர்வார்கள்.

முதல் பால்

குழந்தை பிறந்து ஒரு மணித்தியாலயத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கலாம்.

பிரசவத்திற்குப் பின் தொடக்க நாட்கள் சிலவற்றிற்கு சுரக்கும் பால் முதல்பால் ஆகும். இது இலேசான மஞ்சள் நிற ஒட்டும் தன்மையுள்ள திரவமாகும். இது சகல பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டிய உணவாகும்.

*பிள்ளைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி நோயிலிருந்து பாதுகாப்புப் பெற முதல் பால் உதவுகிறது.

*பிள்ளையின் உடல் உறுப்புகளின் விருத்திக்கு இம்முதல் பால் உதவுகின்றது.

*பிள்ளை மஞ்சள் நிறமாவதைத் தடுக்க இம்முதல் பால் உதவுகின்றது.

*ஒவ்வாமை, அஜீரணம் என்பவற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும்

*கண் நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க இம் முதல் பால் உதவுகின்றது.

தாய்ப்பால் கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:

பிள்ளை பால் உறிஞ்சும்போது பால் சுரப்பு ஆரம்பமாகின்றது. பால் வெளியேறும் அளவுக்கேற்ப பால் சுரப்பும் இருக்கும். ஆகையால் அடிக்கடி குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது பால் சுரப்பு அதிகரிக்கும். இரவிலும் பால் கொடுக்க வேண்டும்.

பால் கொடுக்கும்போது வசதியாக அமர்ந்தோ அல்லது படுத்தோ ஒரே முலையில் பால் கொடுப்பது சிறந்தது. அடுத்த முறை பால் கொடுக்கும்போது மற்றைய முலையில் பால் கொடுக்கத் தொடங்க வேண்டும்.

*தொடக்கத்தில் முலையிலிருந்து வெளியேறும் பாலில் நீர்த்தன்மை அதிகமுள்ளதால் பிள்ளையின் தாகம் தீர்க்கப்படும். பின்னைய பாலில் கொழுப்பு அதிகமுள்ளதால் பிள்ளை நன்கு வளர அது உதவுகின்றது.

(சரியான முறையில் பிள்ளைக்கு பால் கிடைப்பதை அது விழுங்கும் முறையிலும் சத்தத்திலும் கன்னங்கள் உப்புவதிலும் அறிந்து கொள்ளலாம்)

*போதுமான அளவு பால் கிடைக்கும்போது பிள்ளைகள் நாள் ஒன்றுக்கு 6 – 7 தடவைகளுக்கு மேல் சிறுநீர் கழிப்பர். நாள் ஒன்று சிறுநீர் கழிக்கும் தடவைகளை கணக்கிடலாம். இதன் மூலம் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

*தாய்ப்பால் கொடுக்க முன்னர் தாய் சூடான பானமொன்றை அருந்துதல் சிறந்தது.

*வேலைக்குச் செல்லும் தாய்மார் அல்லது பிள்ளையை விட்டு வெளியில் செல்ல வேண்டி ஏற்படும்போது முலையிலிருந்து பாலை எடுத்து அதை கரண்டியாலோ அல்லது கோப்பையிலோ பிள்ளைக்குப் பருக்கலாம்.

எனவே தாய்மார் பாலை கறக்கும்முறை பருக்கும் முறை மற்றும் அதை பாத்திரத்தில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கும் முறை என்பவற்றை அறிந்திருத்தல் அவசியம்.

ஒரு பக்க முலை வெறுமையாகும்வரை அதிலிருந்து பாலை எடுத்து பின் மற்றைய முலையிலிருந்து பாலை எடுக்கவும் அறை வெப்ப நிலையில் 6 மணித்தியாலமும் குளிர்சாதனப் பெட்டியில் கீழ் தட்டில் 24 மணித்தியாலமும் பால் பழுதடையாது பாதுகாக்கலாம்.

தாய் வேலைக்குப்போன பின் வேலை ஸ்தாபனத்தில் 3 மணித்தியாலயத்திற்கு ஒரு முறை முலையிலிருந்து பாலை வெளி அகற்றுவதன் மூலம் முலையில் பால் இறுக்கமடைவதைத் தவிர்ப்பதுடன் பால் சுரப்பையும் தொடர்ச்சியாகப் பேணலாம்.

*பிள்ளைக்குப் பால் கொடுக்கும்முறை, பால் குடித்த பின் பிள்ளைக்கு வாயு வெளியேற்றல் மற்றும் குழந்தைக்கு பால் கொடுத்த பின் நித்திரையாக்கும் முறை என்பனவற்றை அதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற தாதியரிடம் உங்கள் பிரசவம் நடைபெற்ற பின் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

*குழந்தை பிறந்து ஆறு மாதம் முடியும்வரை தனித் தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது. ஆனால் குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்காதவிடத்து தற்போது வைத்திய ஆலோசனையுடன் ஏனைய முறைகளில் (போத்தல்) பாலூட்ட அறிவுறுத்தப்படுகின்றது.

குழந்தைக்குத் தேவைப்படும் ஒவ்வொரு முறையும் பால் கொடுப்பது சிறந்தது. குழந்தையின் பசியை சைகை மூலம் அறிந்து அது அழும்வரை காத்திருக்காமல் பால் கொடுப்பது சிறந்தது.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்:

*தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், சூலகப்புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறையும்.

*பிரசவத்திற்கு பின் தாயின் உடல் நிறை குறைவடையும். *தாய்க்கும் பிள்ளைக்குமான ஒட்டுறவு அதிகரிக்கும். தாய்க்கு உள ரீதியான ஆறுதல் கிடைக்கும்.எனவே நேயர்களே பிரசவமானது சுகப் பிரசவமோ அல்லது சிசேரியன் பிரசவமோ எதுவாயினும் அதன் பின் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் முக்கிய பிரசவத்தின் பின் குழந்தைக்குப் பால் கொடுப்பது தொடர்பான அறிவுரைகளை அதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற தாதியரிடம் மற்றும் சுகாதார சேவை உத்தியோகத்தரிடம் கேட்டு தெரிந்து கொள்வது சிறந்தது.