இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டால் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் டெங்கு அல்லது அதற்கு நிகரான ஏதேனும் நோய் பரவினால் நிலைமை விபரீதமாகலாம் என, தேசிய இரத்த வங்கியின் இயக்குனர் டொக்டர் ருக்சன் பெல்லன தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இதுபோன்ற நெருக்கடி நிலை ஏற்படுவதாகவும் அதைத் தவிர்ப்பதற்காக, பொது மக்கள் முடிந்தவரை அருகிலுள்ள இரத்த வங்கியின் கிளை நிலையங்களுக்குச் சென்று இரத்த தானம் செய்யும் படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் 107 இரத்த வங்கி நிலையங்கள் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், நிறுவனங்கள் இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்யும் பட்சத்தில், அதற்காக நடமாடும் இரத்த வங்கிகளையும் தாம் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு 011-236991/34 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.