பொலிஸ் அதிகாரியொருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.

மீகஹாவத்த பகுதியில், சுமார் இரண்டு கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றத்துக்காக இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பொலிஸ் நிலையம் வந்த அப்பெண்ணின் சகோதரர் மீகஹாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைச் சந்தித்தார்.

அப்போது, தன் சகோதரி மீது உண்மையான குற்றச்சாட்டைப் பதிவு செய்யாமல், இலகுவில் வெளிவரக்கூடிய வகையிலான குற்றத்தைப் பதிவுசெய்யுமாறும் அதற்கு கைமாறாக 2 இலட்ச ரூபா தருவதாகவும் கூறினார்.

அதற்குச் சம்மதிப்பதாகக் கூறிய பொறுப்பதிகாரி நாளை (இன்று 9ஆம் திகதி) பணத்துடன் வருமாறு கூறி அனுப்பினார். பின்னர், இது குறித்து பொலிஸாருக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறியத் தந்தார்.

அதன்படி, இன்று காலை பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க பணத்துடன் வந்த அந்த நபரை, ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.

அவர் வசமிருந்த பையில் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பணமும் பண அட்டையும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.