இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் ஒட்டுமொத்த போட்டிகளுக்கான தலைவராக செயற்பட்டுவந்த மெத்தியூஸ் கடந்த வருடம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரையடுத்து தனது இராஜினாமாவை அறிவித்தார்.

பின்னர் இலங்கை அணியின் டெஸ்ட் தலைவராக தினேஸ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டதுடன், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு முன்னேற்றங்களை கண்டாலும், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் பல மோசமான தோல்விகளை சந்தித்தது.

இதனால் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். 

இதன்படி சாமர கப்புகெதர, திசர பெரேரா போன்றோரும் அணித்தலைமையை பொறுப்பேற்றனர்.

எனினும் அணியில் முன்னேற்றங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் மெத்தியூஸ் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளின் தலைவர் பொறுப்பு சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ், இலங்கை, சிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்கும் முக்கோணத் தொடர் இடம்பெவுள்ள நிலையில், அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டள்ளது.

 குறித்த தொடருக்காக இலங்கை அணி எதிர்வரும் 13 ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி புறப்படவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாம் வீரர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

அஞ்சலோ மெத்தியூஸ், உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குஷல் மெண்டிஸ், டினேஸ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குணவர்தன, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சாமிர, ஷெஹான் மதுசங்க, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகன், வனிது ஹசரங்க ஆகியோர் 16 பேர் கொண்ட இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.