விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

தயா மாஸ்டர் தற்போது யாழில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், நேற்று (8) அவரது அலுவலகத்துக்குள் நுழைந்த ஒருவர், திடீரென தயா மாஸ்டரைத் தாக்க ஆரம்பித்தார்.

சுதாகரித்துக்கொண்ட தயா மாஸ்டர், தற்காப்பு முயற்சிகளால் அந்நபரை வெளியேற்றினார்.

எனினும் பயங்கரமான ஆயுதங்களுடன் மீண்டும் அந்நிலையத்தின் வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் தயா மாஸ்டர் உள்ளிட்டோரை எச்சரித்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவானது.

அதை அடிப்படையாக வைத்து தாக்குதல் நடத்தியவரைக் கைது செய்த பொலிஸார், அவரை யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதான அந்நபர், எதற்காக தயா மாஸ்டரைத் தாக்கினார் என்ற விபரம் வெளியாகவில்லை.