மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டர்ஸ்பி தோட்டத்தில் தோட்ட தொழிற்சாலையின் அதிகாரி ஒருவருக்கு எதிராக அத்தோட்ட மக்கள் நேற்று மாலை  தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஸ்டர்ஸ்பி தோட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளிகள் இருவரை குறித்த அதிகாரி தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த தொழிலாளர்கள் இருவர் பணிப்புரிந்துக்கொண்டிருந்த வேளையில், கொழுந்தின் இறாத்தல் குறைவாக இருப்பதாக தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான இருவரும் சிகிச்சைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், ஒருவர் மாத்திரம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையில் பாதிக்கப்பட்டவர்களால் முறைபாடு பதிவு செய்ததன் பின் தாக்கியதாக கூறப்படும் தொழிற்சாலை அதிகாரியை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.