(லியோ நிரோஷ தர்ஷன்)

உலக நிதிச் சந்தையின் கதவடைப்பை தவிர்க்க தேசிய சொத்துக்களை விற்றேனும் கடனை செலுத்த வேண்டிய நெருக்கடியான நிலைமையில் அரசாங்கம் உள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் தினமாக அமைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு காலப்பகுதியிலும் காணப்படாத மீளமுடியாத பாரிய கடன் சுமையை நல்லாட்சி அரசாங்கம் நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ளது. 

நல்லாட்சி தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. 

இந்த குறுகிய காலத்திற்குள் நாட்டில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியும் , அதனை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளும் முக்கிய கருப்பொருளாக காணப்படுகின்றது. இதேபோன்று நல்லாட்சி அரசாங்கம் நாட்டிற்கு பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 36 மாதங்களில் நல்லாட்சி அரசாங்கம் 14.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது. 

எமது ஆட்சிக் காலத்தின் திட்டங்களையே நல்லாட்சி அரசாங்கம் தற்போது உரிமை கொண்டாடுகிறது. எனது ஆட்சியில் காணப்பட்டதாக கூறப்படும் கடன் சுமைகளை காரணம் காட்டியே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. 

எனவே எனது அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனை செலுத்துவதற்காக சர்வதேசத்திடமிருந்து கடன்பெறுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகின்றமை உண்மைக்கு முரணானதாகும். 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து மொத்த மக்களையும் வருமான வரிக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

மக்கள் மீதான வரிகளில் மாத்திரம் அரச கடன்களை செலுத்த முடியாமையினால் விமான நிலையங்கள் துறைமுகங்கள் உட்பட அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்வதும் இதன் அடிப்படையிலாகும். 

தேசிய சொத்துக்களை விற்பனை செய்தேனும் இந்த கடன்களை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

ஏனென்றால் இந்த கடன்களை அரசாங்கம் செலுத்தாவிடின் உலக நிதி சந்தையில் இலங்கைக்கு கதவடைப்பு ஏற்படும். இந்த மோசடியான அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்ரவரி 10 ஆம் திகதி அமைய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று  வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.