பாகிஸ்தானின் வர்த்தக அபிவிருத்தி அதிகாரசபை (TDAP) இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து“பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி -2018” ஐ நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் இடம்பெற்ற வெற்றிகரமான வர்த்தக கண்காட்சியினை தொடர்ந்து இம் முறை 3 ஆவது முறையாகவும் இடம்பெறவுள்ளது.

இக் கண்காட்சியானது இம் மாதம் 12 முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாராநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

இம்மாதம் 12 ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள இக்கண்காட்சியின் ஆரம்பநிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளவுள்ளார். 

இக்கண்காட்சியானது முன்னணி பாகிஸ்தானிய வர்த்தகக் கம்பனிகளின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை இலங்கை மக்கள் மற்றும் வர்த்தக சமூகங்களிற்கு காட்சிப்படுத்துவதற்கான  சிறப்பான வர்த்தக சந்தர்ப்பத்தினை  வழங்கவிருக்கின்றது. 

அத்துடன் இக்கண்காட்சி இருநாடுகளுக்கிடையில் ஏலவே நிலவும் வர்த்தக உறவுகளை பன்முகபடுத்தவும் பல்வேறுவிதமான தரமான பாகிஸ்தானிய உற்பத்திகளை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தவும் பங்களிப்புச் செய்யவிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற இக்கண்காட்சியில் பாகிஸ்தானின் பொறியியல் உற்பத்திகள், வாகன உதிரிப்பாகங்கள், விவசாய உற்பத்திகள், ஆடை மற்றும் புடைவை உற்பத்திகள், வடிவமைப்பு அணிகலன்கள், கைவினைப்பொருள் மற்றும் பாரம்பரிய ஆடைகள், அலங்காரப் பொருட்கள், மருந்துவகை, மூலிகைகள், வெட்டு உபகரணங்கள், தளபாடங்கள், கார்பட் வகைகள் மற்றும் மாபிள் உற்பத்திகள் மற்றும் சேவைகள் என்பன பாகிஸ்தானின் முன்னணி வணிக நிறுவனங்களால் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் முதன்முறையாக பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரியங்கள் மற்றும் கந்தார பௌத்த நாகரீகங்களை மக்களுக்கு காட்சிப்படுத்துவதன் நிமித்தம் விஷேட கடைத் தொகுதியொன்று இவ்வர்த்தகக் கண்காட்சியின் போது பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தினால் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது. இதன்பொழுது கந்தார நாகரீகம் தொடர்பான தகவல்கள் அடங்கிய இறுவெட்டுக்கள், புத்தகங்கள்  மற்றும் துண்டுப்பிரசுரங்கள் இலவசமாக வழங்கப்படவிருக்கின்றன.

இவ்வர்த்தகக் கண்காட்சியானது இருநாடுகளிற்கிடையில் நிலவும் வர்த்தக இணைப்புக்களை அடுத்த மட்டத்திற்கு அபிவிருத்தி செய்யமுடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.