(எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.  ஊடகங்களின் தொடர் போராட்டமே அறிக்கை வெளிவர காரணமாகும் என கோப் குழு முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்த அவர்,

நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க நாட்டின் பணத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய தவறியுள்ளதுடன் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு மாத்திரம் சார்ப்பாக நடந்துகொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பிரதமரின் கீழ் இருக்கும் நிறுவனத்தில் இவ்வாறு பாரிய மோசடி இடம்பெறுவதை தடுப்பதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிதி மோசடி தொடர்பில் பிரதமருக்கு குற்றச்சாட்டு இல்லாவிட்டாலும் அவர் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளார். அத்துடன் பிரதமர் இந்த விசாரணையை முன்கொண்டுசெல்லாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வந்தார்.

இதேவேளை, அதிகமானவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அர்ஜுன மஹேந்திரனை அந்த பதவிக்கு நியமித்த ஜனாதிபதியும் பொறுப்பு கூறவேண்டும் என்றார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி  தொடர்பான ஜனாதிபதி ஆணைக்ழுவின் அறிக்கை தொடர்பாக வினவியபோதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.