சிவனொளிபாதமலைக்கு வழிபடுவதற்கு வந்த 13 இளைஞர்கள் நேற்று மாலை தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து ஒரு தொகை போதை பொருளுடன் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் படி, மோப்ப நாய்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒரு தொகை கேரள கஞ்சா, போதையை ஏற்படுத்தக் கூடிய ஒரு தொகை வில்லைகள், சட்டவிரோதமான சிகரட்டுக்கள் மற்றும் மதனமோதகம் போன்ற போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, ஹட்டன் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர்கள், 20 தொடக்கம் 25 வயதினையுடையவர்கள் எனவும், போகந்தர, மட்டக்களப்பு, கண்டி, கம்பளை மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட 13 பேரையும் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சிவனொளிபாதமலைக்கு வருகின்ற பக்தர்களுக்கு இதுபோன்ற போதை பொருட்களை கொண்டு வரவேண்டாம் எனவும், இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவேரை பிடிக்க, ஹட்டன் ரயில் நிலையம், கினிகத்தேன, நோட்டன் பிரீஜ், வட்டவலை, நோர்வூட், நல்லதண்ணி, மஸ்கெலியா போன்ற பிரதேசங்களில் விஷேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் உள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.