கோழிமுட்டை போசாக்கு நிறைந்த பூரண உணவு. கோழிமுட்டையில் புரதச்சத்து, விற்றமின்கள் மற்றும் ஒட்சிஎதிரிப் பொருட்கள் அடங்கியுள்ளதுடன் சிறிய அளவில் கனியுப்புக்களாகிய செம்பு, அயன், மக்னீசியம், பொஸ்பரஸ்,, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் கல்சியம் ஆகியன அடங்கியுள்ளன. கோழிமுட்டை மலிவாகவும் இலகுவாகவும் கிடைப்பதால் பாமரமக்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு கோழிமுட்டையை நம்பியிருக்கின்றார்கள். இருப்பினும் உலகளாவிய ரீதியில் கோழிமுட்டைகள் மாசடைந்து காணப்பட்டதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சுப்பர் மார்கெட்டுக்களில் உள்ள மாசடைந்த முட்டைகளை அகற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தன. இதைத் தொடர்ந்து நமது நாட்டில் இறக்குமதியாகும் கோழி முட்டைகள் அல்லது கோழி முட்டை சேர்ந்த உற்பத்திப்பொருள் உண்பதற்கு தகுதியானவையா? என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
முதன் முதலில் கடந்த ஜூலை மாதம் நெதர்லாந்தில் கோழி முட்டைகளில் விவசாயத்தில் உபயோகப் படுத்தப்படும் "விப் றோனில்" என்னும் நஞ்சு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நச்சுப் பொருள் கால்நடைகளில் ஈக்கள், பேன்கள், உண்ணிகள் மற்றும் பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தப்படுகிறதுடன் விவசாயத்தில் களை கொல்லியாகவும் உபயோகிக்கப்படுகிறது. இந்த விப்றோனை உபயோகித்த ஏழு பண்ணைகளை அரசு மூடி சீல் வைத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இது ஒரு உள்ளூர் பிரச்சினையாகக் கணிப்பிடப்பட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் பெல்ஜியத்திலும் ஜேர்மனியிலும் மில்லியன் கணக்கான கோழி முட்டைகளில் விப்றோன் நஞ்சு கண்டுபிடிக்கப்பட்டது. அதேவேளை நெதர்லாந்து தேசத்திலிருந்து மாசடைந்த முட்டைகள் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தேசத்திற்கு விநியோகிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. இங்கிலாந்திலிருந்து நாம் கோழி முட்டை சேர்த்து தயாரிக்கப்படும் சொக்லேட், குக்கீஸ், பிஸ்கட் வகைகள் மற்றும் மயோனிக்ஸ் போன்ற பொருட்களையும் இறக்குமதி செய்கின்றோம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் நடந்த கோழி முட்டை ஊழலால் பல நாடுகளில் உள்ள சுப்பர் மார்கெட்டுகளிலிருந்து மில்லியன் கணக்கான கோழிமுட்டைகள் மீளப்பெறப்பட்டு அழிக்கப்பட்டன. சிறுவியாபாரிகள் இப்பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லை. அதேவேளை இப்பிரச்சினை ஒரு கொலைக்குற்றமாகும். இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என ஜேர்மனிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உணவுப்பதார்த்தங்களில் பாதுகாப்பான அளவு என சிபாரிசு செய்யப்பட்ட அளவிலும் கூடுதலான அளவு விப்றோன் என்னும் நச்சுப் பதார்த்தம் கண்டுபிடிக்கப்பட்டதே பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்தது. கோழிகளில் பேன், உண்ணி போன்றவற்றை நீக்குவதற்காக உபயோகப்படுத்தப்படும் விப்றோன் என்னும் நச்சுப்பதார்த்தம் தவறுதலாக கோழிகளின் உணவில் கலந்துள்ளது.
இந்த நச்சுப் பதார்த்தம் கோழிகளின் உடலில் சென்று எப்படியோ முட்டைக்குள் புகுந்துவிட்டன. முட்டைகள் மாசடைந்த காரணத்தினால் சுப்பர் மார்கெட்டுகளிலிருந்து மில்லியன் கணக்கான கோழி முட்டைகள் மீளப் பெறப்பட்டு அழிக்கப்பட்டன.
அதேவேளை இதுபோன்ற ஊழல் இலண்டனுக்கு புதிதானதல்ல. 2013ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான கிலோ மாசடைந்த குதிரை உணவை மீளப்பெற்றதன் பின்பு இதுவே அதிகளவு கோழிமுட்டைகளை சந்தைகளிலிருந்து திரும்பப் பெற்ற சம்பவமாகும்.
நாம் உணவுப் பொதிகளில் அச்சிடப்பட்டு இருக்கும் வாசகங்களை நம்பியே உணவுப் பொருட்களை சுப்பர் மார்கெட்டுகளிலிருந்து விலை கொடுத்துப் பெற்று உண்கின்றோம். இருப்பினும் மாசடைந்த உணவுகளால் பெரும் அனர்த்தங்களே விளைந்திருக்கின்றன.
புரதம் நிறைந்த பால்மா என்னும் தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காக சீனநாட்டில் மெலிலமின் என்னும் நச்சுப்பொருள் பால்மாவில் கலந்து தயாரித்து விநியோகம் செய்ததன் விளைவாக ஆறு குழந்தைகள் மரணத்தை தழுவியதுடன் 50,000 க்கு அதிகமானோர் நோய்வாய்ப்பட்டு வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். பல நாடுகளில் சுற்றுலாப்பயணிகள் மெதனோல் மற்றும் குளோரோபோம் கலந்த மதுவகைகளை அருந்தி நோய்வாய்ப்பட்டதும் செய்திகளாகப் பத்திரிகைகளில் வெளிவந்தன.
நமது நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு உயரும் கோழி முட்டைகளின் விலையைக் குறைப்பதற்காக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் ஐந்து மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்து விநியோகிக்கத் தீர்மானித்திருக்கிறது என பத்திரிகைச் செய்தி வெளிவந்தது. மேலும் குக்கீஸ்,பிஸ்கட்டுகள், சொக்லெட்டுகள், மயோனிக்ஸ் போன்ற கோழி முட்டையைச் சேர்த்து உற்பத்தி செய்யும் பொருட்கள் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்பொருட்களில் எவ்வளவுவீதம் மாசு காணப்படுகின்றது என பகுப்பாராய்ந்து பார்த்துக் கொள்வனவு செய்வது மிக அவசியமல்லவா?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM