நல்லாட்சி அரசின் மந்தமான செயற்பாடு குறித்த அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் மக்கள் எதிர்வரும் தேர்தலைப் பயன்படுத்தலாம் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (6) நடைபெற்ற இலங்கை மக்கள் முன்னணி ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில், வெளிநாட்டில் இருந்தவாறே ‘ஸ்கைப்’ மூலம் இணைந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

“தற்போதைய அரசு நாட்டின் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தாமல் தமது அரசியல் நோக்கங்களை அடைவதில் மட்டுமே கரிசனை காட்டிவருகிறது. 

“உலகளவில் இவ்வரசு வெற்றிபெற்றதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். நமது நாட்டுக்குத் தேவையானவாறு உலக நாடுகளின் உதவிகளைப் பயன்படுத்திக் கொள்வதுதான் உலகளாவிய வெற்றி என்று கூற முடியும். ஆனால் நடப்பது என்ன? உலக நாடுகளின் தாளத்துக்கு இந்த அரசு ஆடிக்கொண்டிருக்கிறது.

“இந்த நிலையில்தான் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அரசின் தவறான போக்கைச் சுட்டிக் காட்டுவதற்கு மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.