ஹிக்கடுவையில், மாணவர்கள் மூவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, கொலையில் முடிந்துள்ளது. பதினேழு வயது இளைஞர் ஒருவரே கத்திக் குத்துக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (5) காலை இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று கூறப்படுகிறது.

மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது வார்த்தை தடித்ததாகவும் அதுவே கைகலப்பாக மாறியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர், மாணவர் ஒருவர் தன் வசம் வைத்திருந்த கத்தியை எடுத்து பலியான மாணவர் மீது குத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் காயமடைந்த மாணவர் ஆரம்ப சிகிச்சைகளுக்காக ஆரச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்தார்.

கொலை செய்ததாகக் கூறப்படும் ஏனைய இரண்டு மாணவர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் தரப்படவில்லை.