“ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மட்டும் நீதி வழங்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தால், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அனைவரும் இன்று சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள்” என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ.குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“பிணைமுறி விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவை நியமிக்க ஜனாதிபதி அன்று எடுத்த முடிவு சரியானது என்பதை, ஆணைக்குழுவை எதிர்த்தவர்களும் இன்று ஒத்துக்கொள்வார்கள். அந்த வகையில் இவ்வாறான ஒரு ஆணைக்குழுவை நியமித்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

“பிணைமுறி விவகாரத்தில் கடந்த சுமார் பத்து மாத காலமாக வழக்கை விசாரிப்பதுடன் நின்றுவிடாமல் அதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இது பாராட்டுக்குரியது.

“தல்கொடபிட்டிய ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்ததுபோல், அரசியலமைப்புக்கு உட்பட்டு இந்த ஆணைக்குழுவுக்கு நீதி வழங்கும் அதிகாரம் வழங்குமாறு நாம் கேட்டிருந்தோம். ஆனால் அது வழங்கப்பட்டிருக்கவில்லை. வழங்கப்பட்டிருந்தால் இந்நேரம் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள்.

“1959ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது அமைச்சரவை, கட்சி மற்றும் பதவிகளில் இருந்து மூன்று பேரைத் தூக்கியெறிந்தார். அதற்குப் பின் அவ்வாறாதொரு செயலை இதுவரை எந்தவொரு அரச தலைவரோ, நாட்டின் தலைவரோ செய்யவில்லை.

“எனினும் 59 ஆண்டுகளுக்குப் பின் இவ்வாறானதொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறித்து நாம் திருப்தியடைகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.