"ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு தேயிலை செடியூடான காணி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தொழிலாளர்களிடம் செய்து கொள்ளப்பட்ட உறுதிபத்திரம் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உறுதிபத்திரம் தொடர்பில் நான் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளேன். அதற்காக நீதிமன்றத்திற்கு அறிக்கையை சமர்பிக்க எமது சட்டதரணி ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளேன்"  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

வட்டவளை - பின்னோயா தோட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"200 வருடங்களாக இருந்த தேயிலை காணி இப்பொழுது இரண்டு வருடங்களாக காடாக்கப்பட்டு வருகின்றமைக்கு காரணம் என்ன? இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி நடக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்கு ஒருவரும் கூட ஊடகத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.

நமது பாட்டன், பூட்டன் உருவாக்கிய தேயிலை மலையை நமது பரம்பரைக்கு பிரிந்து கொடுத்தால் என்ன? எம்மால் பராமரிக்க முடியும். படித்தவர்களுக்கு கூட இல்லாத அனுபவம் தேயிலை காணியில் தொழில் புரிபவர்களுக்கு அதிகமாக இருக்கின்றது. ஆதலால் காணிகளை எம்மால் பராமரிக்க முடியும்.

தேயிலை காணிகள் பிரிக்கப்படுகின்றது. இது முறைகேடாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆரம்ப காலத்திலிருந்து கூட்டு ஒப்பந்தத்தில் கூட்டு கமிட்டி மற்றும் முதலாளி சம்மேளனத்துடன் தொழிலாளர்களின் விடயத்திற்கு கையொப்பம் இடுவது நான் தான்.

ஆனால் தோட்ட காணிகள் பிரிக்கப்படுவதற்கு அத்தோட்டத்தை நிர்வகிக்கும் கம்பனி தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறுவது எவ்வாறு? தொழிலாளர்கள்  என்னுடைய அங்கத்தவர்கள்.

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொகுதிவாரியாக நடைபெறுகின்றது. உங்களுடைய தொகுதிக்கு சேவை செய்ய கூடிய காங்கிரஸ் வேட்பாளரை 85 சதவீதம் வாக்குகளை அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இதனை எதிர்த்து போட்டியிடுபவர்கள் கட்டுபணத்தை இழக்க வேண்டும்.

அதேவேளை கொட்டகலை பகுதி தோட்டங்களில் தேர்தல் நடவடிக்கைக்காக தலைவர்களுக்கு சிலர் 25,000 ரூபாய் பணம் வழங்கி வருகின்றனர். இது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. உங்கள் பகுதிக்கு இவ்வாறு வந்தால் அவர்களை திருப்பி அடியுங்கள்" என தெரிவித்தார்.