கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் இருந்து இன்று (5) ஒருதொகை மோட்டார் ஷெல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உரிமையாளர் ஒருவர் தனக்குச் சொந்தமான நிலப்பரப்பை சொந்தத் தேவைக்காகத் தோண்டியபோதே இந்த ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸார் ஷெல்களைக் கைப்பற்றினர்.

76 மற்றும் 81 எம்எம் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஷெல்கள், யுத்த காலத்தின்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்த வைத்திருந்தவையாக இருக்கவேண்டும் என்று பொலிஸார் கூறினர்.

கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியைப் பெற்றபின் இந்த ஷெல்கள் செயலிழக்கச் செய்யப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.