அநுராதபுரம் - எலயாபத்துவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை அவரது உறவினரான மொடலிங் வடிவமைப்பாளர் கடந்த 27ஆம் திகதி கடத்திச் சென்றுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட மாணவியும் குறித்த நபரும் கடந்த மூன்று வருடங்களாக காதல் தொடர்பை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது மகளை எங்கு தேடியும் காணாத குறித்த மாணவியின் தந்தை அநுராதபுர பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய தீவிர விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த நபர் மாணவியை அவரது சகோதரியின் வீட்டிற்கு கடத்திச் சென்றமை தெரிய வந்தள்ளது.

சகோதரியின் வீட்டிற்கு அழைப்பை ஏற்படுத்திய பொலிஸார் சகோதரனையும் சிறுமியையும் உடனடியாக பொலிஸில் ஆஜர்படுத்துமாறு கூற அதற்கு சகோதரி “புது வருடத்தின் பிறகு இருவரையும் அனுப்பி வைப்பதாக” கூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.

அதன் பிறகு பொலிஸார் குறித்த சகோதரியின் வீட்டிற்கு சென்று பொலிஸாரின் கட்டளையை மதிக்காத சகோதரியையும் மாணவியை கடத்திய சகோதரனையும் கைது செய்துள்ளனர்.

இருவரையும் கைது செய்த பொலிஸார், மாணவியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் எடுத்து குறித்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளாரா? என்பதை பரிசோதிக்க அநுராதபுர போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்தியரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

18 வயதிற்குட்பட்ட சிறுமியின் உறவினராக இருந்த போதும் சட்டரீதியாக பாதுகாவலர் உரிமம் இல்லாது அழைத்துச் சென்ற குற்றத்திற்காக குறித்த மொடலிங் வடிவமைப்பாளரையும், அதற்கு துணைபோன சகோதரியையும் பொலிஸார் நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.