மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோவிற்கும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் ஆயர் இல்லம் சென்ற பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோவுடன் சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த கலந்துரையாடலினை தொடர்ந்து கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,

"மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆயர் அவர்களை சந்தித்து மன்னார் மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாகவும், கடந்த காலத்தில் இருந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலைய ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் முன்னெடுத்துச் சென்ற தமிழ் தேசிய பணிகளையும், மன்னார் மக்களின் அடிப்படை பணிகளையும் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் அவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்திருந்தோம்.

மேலும் மன்னார் மக்களினுடைய அடிப்படை பிரச்சினைகள் சம்மந்தமாகவும், அடக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் புதிய ஆயர் அவர்களுக்கு தெரிய படுத்தினோம்.

எங்கள் கருத்துக்களை அவர் ஏற்றுக்கொண்டார்.மேலும் தான் அவ்வாறு செயற்படுத்துவதாகவும் உறுதி பட தெரிவித்திருந்தார்.

புதிய ஆயர் அவர்கள் தமிழ் உணர்வு மிக்கவராகவும் எமது பிரச்சினைகளை புறிந்து கொள்ளக்கூடியவராகவும், அவர் கொழும்பில் இருந்து கொண்டு குறித்த விடையங்கள் எல்லாம் அவதானித்தேன் என்றும் தெரிவித்ததோடு உணர்வுகளை புரிந்து கொண்டு செயற்படுவதாகவும் எங்களுக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த சந்திப்பு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என  தெரிவித்தார்.