"திகாம்பரம், ஆறுமுகன் அண்ணாச்சிகள் நினைப்பது போன்று தோட்ட தொழிலாளர்கள் குட்ட குட்ட குனியும் பரம்பரையும் அல்ல. கொண்டைக்கட்டிய பரம்பரையும் அல்ல. தொழிலாளர்கள் இன்று சிந்திப்பதற்கு தலைப்பட்டுள்ளார்கள்." என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பிலான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுக்கூட்டம் நேற்று  மாலை நோர்வூட் நகரில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராமலிங்கம் சந்திரசேகரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிப்பதாவது,

"2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவின் பக்கத்தை சார்ந்திருந்த திகாம்பரம் அண்ணாச்சி, மஹிந்தவுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னார். அன்று, இந் நாட்டின் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 83 ஆவது ஆண்டு ஜீலை கலவரத்தில் நமது மக்களை அழித்து சொத்துக்களை சூறையாடியவர் என்றும் சொன்னார். அவ்வாறு சொன்ன திகாம்பரம் இன்று ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தான் நாட்டில் நடப்பதாக தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் மக்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கின்றார்.

அதேபோன்று 2005 ஆம் ஆண்டு ஆறுமுகன் அண்ணாச்சி திகாம்பரம் மஹிந்தவுடன் இருக்கின்றார். மஹிந்த சிந்தனை என்பது தமிழர்களின் தன்மானத்தை குழி தோண்டி புதைக்க போகின்றது என்றார். ஆகவே ரணிலுக்கு வாக்களியுங்கள் என்றார்.

அதே நேரத்தில் திகாம்பரம் 2005 ஆம் ஆண்டு மஹிந்தவின் தோளில் தொங்கிக் கொண்டு ஐயா மஹிந்த சிந்தனை தான் இலங்கையில் சிறந்த சிந்தனை. ரணில் மோசடிகாரன் என்று சொன்னார்.

இவ்வாறாக மலையகத்தில் பார்க்கும் போது திகாவும், தொண்டாவும் குடும்பி சண்டை போட்டுக்கொண்டு செயல்படுகின்றனர். ஆனால் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கூடுதலான வாக்கு மஹிந்தவுக்கு கிடைக்கப்பெற்று அவர் ஜனாதிபதி ஆனார்.

அந்த சமயத்தில் அரலி மாளிகையில் பின் கதவை திறந்து கொண்டு ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், செல்லசாமி ஆகியோர் மஹிந்தவிடம் சென்று அடிப்பணிந்து அமைச்சு பதவி தாருங்கள் என கேட்டுக்கொண்டனர்.

அதன்போது புத்திரசிகாமணியை தவிர ஏனைய அணைவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டது. பதவியை வாங்கிக்கொண்டு முன் கதவுக்கு வந்தவர்கள் "அடே தோட்ட தொழிலாளர்களே! மஹிந்த சிந்தனை என்பது தமிழ் மக்களின் தன்மானத்தை காக்ககூடிய சிறந்த சிந்தனை என்றார்கள்.

அப்படி என்றால் இதுநாள் வரைக்கும் இவர்கள் இருவரும் நினைத்துக்கொண்டு இருப்பது குட்ட குட்ட குனிந்து செல்ல கூடிய பரம்பரை தோட்ட தொழிலாளி பரம்பரை என்றும் கொண்டைக்கட்டிய பரம்பரை தொழிலாளர்கள் என்றும்.

தொடர்ந்தும் இவர்கள் இருவரும் போடுகின்ற தாளத்திற்கு ஆடுகின்ற பொம்மைகள் என தொழிலாளர்கள் நினைக்கின்றார்கள். கம்பளிக்கு  10ரூபாய் என்ற காலம் அவர்களை ஏமாற்றிய காலம் போய்விட்டது. இன்று தொழிலாளர்கள் சிந்திக்க தலைப்பட்டுள்ளார்கள். இந்த நாட்டில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள்.

இவ்வாறாக திகா, தொண்டா ஆகிய இரு கட்சிகளுக்கும் தொடர்ந்தும் வாக்களித்தால் தன் கையால் மண்ணை வாரி தன் பிள்ளையின் மேல் போடுவதற்கு சமமாகி விடும்." என அவர் மேலும் தெரிவித்தார்.