சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கடத்திவரமுற்பட்ட நபரொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சவுதி அரேபியா - மக்கா நகரிலிருந்து நேற்றைய தினம் விமானம் மூலம் குறித்த நபர்   இலங்கை வந்துள்ளார். 

இந்நிலையில் சுங்க அதிகாரிகள் அவரிடம் சோதனை மேற்கொண்ட  நிலையில், 814.16 கிராம் நிறையுடைய தங்க வளையல்கள், மோதிரங்கள் மற்றும் பதக்கங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார்  44 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்தகரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அவரை 10 இலட்சம் ரூபா அபராதத் தொகையில் விடுதலை செய்தனர்.