மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் டெங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் விசேட டெங்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காத்தான்குடியில் ஒரு வாரத்தில் இரு சிறுமியர் டெங்கினால் உயிரிழந்துள்ள நிலையில் காத்தான்குடி பிரதேசம் டெங்கு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பொதுச்சுகாதார பரிசோதகர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் இருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தமது பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.