(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந் நிலையில்  இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உதவி ஒத்தாசை செய்ததாக சந்தேகிக்கபப்டும் பிரதான சந்தேக நபரான குடுசுட்டாவின் மனைவியை நேற்று கைது செய்த பொலிஸார், இன்று குடுசுட்டாவின் சகோதரனான  சத்துரங்கவின் மாமியாரைக் கைது செய்தனர். 

உதவி ஒத்தாசை செய்தமை தொடர்பிலான சந்தேகத்திலேயே அவரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த துப்பககிச் சூடு மற்றும் அதன் போது இடம்பெற்ற மோதல்கள் சூழல் அவ்விடத்தில் இரு பெண்களும் இருந்ததாக பொலிஸ்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதான சத்துரங்கவின் மாமியாரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் சம்பவத்தின் போது சத்துரங்கவின் மனைவியும் ஸ்தலத்துக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் துப்பககிச் சூட்டை நடாத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ள பாதாள உலகக் உறுப்பினரும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவருமான குடு சுட்டாவையும் அவனது சகோதரன் சத்துரங்கவையும் தேடி பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவொன்றும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

 

நாகலகம் வீதி - ரயில் தண்டவாளம் உள்ள இடத்தில் நேற்று  மாலை 4.30 மணியளவில் இந்த துப்பககிச் சூட்டு  சம்பவம் இடம்பெற்றிருந்தது.  

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 25 - 30 வயதுக்கு இடைப்பட்ட நால்வரில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாகவுள்ளதாகவும் மற்றைய  இருவரில் ஒருவருக்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்றும் மேற்கொள்ளப்ப்ட்டுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பீர்வின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமித்தி சமரகோன் தெரிவித்தார்.