இலங்கை கிரிக்கெட் அணியினை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும் நோக்குடன் புதிய தலைமை பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க அவுஸ்திரேலிய உளவியல் நிபுணர் வைத்தியர் பில் ஜோன்ஸி இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய உளவியல் நிபுணர் இலங்கை கிரிக்கெட் அணிக்கான உளவியல் அபிவிருத்தி பயிற்சியை நேற்று இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் ஆரம்பித்தார்.

உளவியல் நிபுணரின் பயிற்சியின் ஆரம்ப கட்டமாக ஒவ்வொரு கிரிக்கெட் வீரரினதும் தனித்திறமைகளை அடையாளம் காணல் மற்றும் அவர்களது ஆளுமை பண்புகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் வீரர்களுக்குமிடையில் சிறந்த உறவை ஏற்படுத்தி அதன் மூலம் பயிற்சிகளை இலகுவாக வீர்கள் பெறுவது போன்றன அடங்குகின்றன.

வைத்தியர் ஜோன்ஸி உளவியல்துறையில் முதுமாணி பட்டத்தை பெற்றுள்ளதோடு உளவியல் ஆலோசனைகள் மற்றும் உளவியல் கல்வி விரிவுரையாளராக குயின்ஸ்லேன்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளார்.

மேலும் ஜோன்ஸி “அன்டர்ஸ்டேன்டிங் அவர் செல்வ்ஸ் என்ட் அதர்ஸ்” “மெனேஜ்மன்ட் எடியுகேஷன்” மற்றும் “தி பவர் ஒப் பொஸிடிவ் டுயிங்” போன்ற பல நூல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.