நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றோம் என்ற நோக்கில் புலம்பெயர் விடுதலைப் புலிகளின் அமைப்புகளின் திட்டங்களை நடைமுறைப்பத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாட்டில் மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்படும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டை மீட்க உயிரித் தியாகம் செய்த இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுச் செல்ல இடமளிக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்களை பாதுகாக்க பத்து இலட்சம் கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் இன்று, கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள சம்புத்தாலோக விஹாரையில் ஆரம்பிக்கப்பட்டது. 

இதில் முதல் கையெழுத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இட்டார். இதனையடுத்து  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலரும் கையெழுத்து இட்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த கோத்தபாய ராஜபக்ஷ,

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு இராணுவ வீரர்களை கொண்டுச் செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தி பத்து இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் நிகழ்வில் நான் இன்று கையொப்பம் இட்டேன். 

நாட்டில் காணப்பட்ட 30 வருட கால கொடிய யுத்தத்தை எமது நாட்டு இராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் மற்றும் அவயங்களை இழந்து முடிவுக்கு கொண்டு வந்தனர். 

ஆனால் வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் விடுதலைப் புலி நபர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து கொண்டு எமது இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுச் செல்ல முனைகின்றனர்.

30 வருட கால யுத்த காலத்தில் பலர் நாட்டை ஆட்சி செய்தனர். இக்காலப் பகுதியில் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் பலியானதோடு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊனமுற்றனர். நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்கவே இவ்வாறு இராணுவ வீரர்கள் தியாகம் செய்துள்ளனர்.

தற்போது வடக்கு கிழக்கு தெற்கு என அனைத்து இடங்களில் உள்ளவர்களும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். இந்த சுதந்திரத்தை பெற்று கொடுத்த இராணுவ வீரர்களை சர்வதேசத்திடம் கொண்டுச் சென்று தண்டனை பெற்றுகொடுப்பது நியாயமற்றதாகும்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றோம் என்ற நோக்கிலேயே இவ்வாறான செயற்படுகின்றனர். இதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. நாட்டில் நிறையபேர் ஒரு விடயத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் போது சிலபேரின் விருப்பத்தை நிறைவேற்றுவதால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும்.

நாட்டில் தற்போது நடைபெறுகின்ற விடயங்கள் யாவும் புலம்பெயர் விடுதலைப் புலி அமைப்பினரின் உந்துதல் காரணமாகவே ஆகும். இதன்மூலம் சிறுபாண்மையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதால் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. 

நாட்டில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருட குறுகிய காலத்தில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்து பாரிய செயற் திட்டங்களை செய்துள்ளோம். இவ்வாறு நாங்கள் செய்த நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது புலம் பெயர் விடுதலைப் புலி அமைப்புகளோ, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளோ ஆதரவு தெரிவிக்கவில்லை.

வடக்கில் நாம் செய்த நல்லிணக்க செயற்பாடுகளே தற்போது காணப்படும் சமாதானத்துக்கு மூலக் காரணங்களாகும். 

யுத்தம் முடிவடைந்து சில பகுதியினரை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்தமையாலேயே இந் நிலைக்கு தள்ளப்பட்டதாக தற்போது அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தவறான கருத்தாகும். 

வடக்கில் வாழ்பவர்களுக்கு சுதந்திரம், பிரஜா உரிமை மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பெற்று கொடுத்தார். காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்டறிய ஆணைக்குழு நியமித்தார். இராணுவ பக்கத்தில் சில குற்றங்கள் இருக்குமாயின் அதை விசாரணை செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன் மூலம் பலருக்கு தண்டனையும் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே சர்வதேச விசாரணை எமக்குத் தேவையில்லை.  இதன் மூலம் நாட்டில் நல்லிணம் ஏற்படாமல் மீண்டும் ஒரு பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றார்.