மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென நம்புகின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் பரிந்துரைத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் குறித்துப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்படி அறிக்கை குறித்து பிரதமர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 10 மாத காலமாக மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் கோப் குழுவாலும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை பிரதமரின் ஆலோசனையின் பேரில் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்டநடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரையினை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் சட்டமா அதிபரிடம் அனுப்பி வைத்து கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் பரிந்துரைத்த நிலையில், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பித்துள்ளார்.

நாட்டில் அரசாங்கத்தின் ஜனநாயகம் மற்றும் சட்ட ஒழுங்குகள் தொடர்பான நடவடிக்கைகள் இதன் மூலம் சிறப்புத் தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக இதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென நம்புகின்றோம்.

அதேபோன்று கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் மற்றும் போலிப் பிரச்சாரங்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்த எவ்விதமான தடைகளுமின்றி சுயாதீன செயற்பாடுகளில் வழிவகுப்பதே எமது நிலைப்பாடாகும் என பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.