எமது அரசாங்கமாக இருந்தாலும் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் தயாராகவுள்ளனரென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையில் இடம்பெற்ற புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

' எனது வாழ்வில் உள்ள முக்கிய தருணமே இந்த நல்லாட்சி அரசாங்கம். நாங்கள் கட்சி என்ற வகையில் பிளவுபட்டு இருந்தோம். இலங்கை சுதந்திர கட்சி வெற்றிபெற்றால் ஐக்கிய தேசியக் கட்சியை தாக்குவதும், ஐக்கிய தேசிய கட்சி வென்றால் இலங்கை சுதந்திரக் கட்சியை தாக்குவதுமாக எம்மிடையே காணப்பட்டிருந்தது. 

நான் இதனை பார்த்தும் உள்ளேன். ஆனால் நாங்கள் இன்று அந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளோம். நாங்கள் நாட்டை முன்னிலைப்படுத்தி சிறந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம். 

நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். வரலாற்றிலேயே இந்த வருடம் தான் அதிக கடன்களை செலுத்த வேண்டிய வருடமாக இருக்கும். ஆனால் எம்மால் முடிந்த அளவு கடன் பிரச்சினையை சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். 

இந்த கடன் சுமை நாட்டு மக்களுக்கு போய் சேராமலிருக்கவே நாங்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றோம். எமது அரசாங்கமும் அமைச்சரவையும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு கூடிய கவனம் செலுத்திவருகின்றன. 

அமைச்சரவை மட்டுமல்ல ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை அபிவிருத்தி செய்ய பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். 

எதற்கு ஜனாதிபதி பதவி! எதற்கு பிரதமர் பதவி! என்று தோன்றுகின்றது. காரணம் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற பின்னர் நிறைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் பிரதான இரண்டு கட்சிகளை இணைத்து, குறிப்பாக வடக்கு தெற்கு, சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பாராது சகல மக்களையும் ஒன்றிணைத்து இந்த நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் எமது அரசாங்கத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. எனக்கும் இது கவலையாகவுள்ளது காரணம் திருடர்கள் இன்னும் பிடிபடாமல் உள்ளமையே. இதுவே  எனக்கு இருக்கும் பெரிய பிரச்சினை. எனினும் எமது அரசாங்கமாக இருந்தாலும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை உண்டு என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிசெய்துவிட்டனர்.

இந் நிகழ்வில் பெற்றோலி வளங்கள் அவிபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.