சீனத் தயாரிப்பான உலக உருண்டைகளில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் காணப்படுவது இந்திய, வெளிநாடு வாழ் இந்தியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கனடாவின் தொடர் விற்பனை நிலையங்களில் ஒன்றான ‘கொட்ஸ்க்கோ ஸ்டோரி’ல், சீனாவில் தயாரிக்கப்பட்ட உலகப் பந்துகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தனது ஆறு வயது மகளுக்குப் பரிசளிப்பதற்காக இப்பந்துகளில் ஒன்றை இந்தியர் ஒருவர் வாங்கினார். அப்பந்தில், இந்தியாவின் தலைப் பகுதியில் உள்ள காஷ்மீர் இந்தியாவில் இருந்து அகற்றப்பட்டதாக - சுயாட்சிப் பிரதேசமாகக் குறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

மேலும் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியும் சீனாவின் வரைபடத்துக்குள் அடக்கப்பட்டிருந்தது அவரது அதிர்ச்சியை இரட்டிப்பாக்கியது.

இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, மேற்படி விற்பனை நிலையத்தில் உள்ள உலகப் பந்துகளின் விற்பனை முடக்கப்பட்டன.

எனினும் கனடாவின் ஏனைய சில விற்பனை நிறுவனங்களிலும் இதே வகையான உலகப் பந்துகள் விற்பனையாவது தெரியவந்துள்ளது. அவற்றை முடக்கும் நடவடிக்கையில் கனடிய பொலிஸார் இறங்கியுள்ளனர்.

சீனாவின் இந்த நடவடிக்கையால் கொதிப்படைந்துள்ள இந்தியர்கள், இதை அனுமதித்தால் முற்றிலும் வித்தியாசமான இந்தியாவின் தோற்றத்தை எதிர்காலச் சந்ததியினர் நம்பத் தொடங்கிவிடுவார்கள் என்றும் சீனாவின் இந்த நடவடிக்கையால் கனடாவாழ் இந்தியர்களுக்கும் கனேடிய நிர்வாகத்துக்கும் இடையே மனத்தாங்கல்கள் ஏற்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்துக்குள் தரைவழியாக சீன இராணுவம் ஊடுருவியுள்ள நிலையில் இவ்விவகாரம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.