அனுராதபுரம் - பாதெனிய வீதியில் கல்கமுவ பிரதேசத்தில் இன்று (4) காலை இடம்பெற்ற வேன் விபத்தில் பதினொரு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

வேன் சாரதி வேனைச் செலுத்தியவாறே தூக்கத்தில் ஆழ்ந்தமையே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர். வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது சாரதி தூங்கியதால் வாகனம் வீதியை விட்டு விலகி, அங்கிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த பதினொரு பேரும் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் எட்டுப் பேர், மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜா எலயில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.