கர்ப்பிணித் தாயொருவர் பிரசவ வலியால் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோது அயலவர்கள் கூடி சமய வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமையால் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கர்ப்பிணித் தாயொருவர் பிரசவ வலியால் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், அவரை உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கர்ப்பிணித்தாய் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே இறந்திருந்ததாகவும் சடலமானது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக லிந்துல வைத்தியசாலையின் வைத்தியரொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கர்ப்பிணித் தாய் வலியால் துடித்த போது அயலவர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்ததுடன் தோட்டத்திற்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வாகனம் வந்த போதிலும் கர்ப்பிணித் தாயை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் காலதாமதமாக்கியுள்ளதாகவும் குறித்த கர்ப்பிணித் தாயின் வலியை  குணமாக்குவதற்காக சிலர் சமய வழிபாட்டில் ஈடுபட்டமையே கால தாமதத்திற்கு காரணம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.