ஜனாதிபதியின் கத்தி பிரதமர் ரணிலைக் காப்பாற்றியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனது கத்தியில் யார் வெட்டுப்படுகிறார்கள் எனத் தெரியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அவரது கத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெட்டுப்படவில்லை. 

அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் மக்களுக்குத் தெரியும் யார் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை சொல்கிறது.

அதில் 11 கோடி ரூபா சூறையாடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் அவரை நியமித்தமை தொடர்பாக மட்டுமே கூறப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச சபைக்கு ஜே.வி.பி. சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை நாவற்குழி  300 வீட்டுத்திட்டப் பகுதியில் இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.