லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நேற்ற இரவு 11 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த இரண்டு பேர் கடும்காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பிட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ருவான்வெல்ல பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வேனில் சாரதியோடு இரண்டு பெண்கள் பயணித்துள்ளதாகவும், சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும், இரண்டு யுவதிகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு காயம்பட்ட 23, 18 வயதுடைய யுவதிகள் இருவரும் நுவரெலியா கந்தபளை மற்றும் தெரணியகலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

எனினும் வேன் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.