பாரிய ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையை சற்று முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மிக முக்கியமான ஒரு மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரத்து 135 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையை, ஆணைக்குழுவின் தலைவர் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளித்தார்.

பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள், ஊழல் மற்றும் அதிகார, அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக ஆராய்வதற்காக, 2015ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் திகதி இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இதுவரை இவ்வாணைக்குழு பதினேழு அறிக்கைகளை ஜனாதிபதி வசம் கையளித்துள்ளதுடன், அவற்றைச் சரிசெய்வதற்கான பரிந்துரைகளை சுமார் ஆயிரத்து 200 பக்கங்களில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.