வலிப்புநோய் பெரும்பாலும் சிறு வயதிலிருந்தே ஏற்படுகிறது. எனினும் எந்த வயதிலும் இந்த நோய் ஏற்படலாம். குழந்தைகளில் காய்ச்சலால் ஏற்படுகின்ற சாதாரண வலிப்பிலிருந்து வலிப்பு நோய் (Epilepsy) மாறுபட்டது. மூளைக்காய்ச்சல், ஏற்பு வலி உள்ளிட்ட சில நோய்களின்போது ஏற்படும் வலிப்பும் வலிப்பு நோயல்ல. அப்படியாயின் வலிப்புநோய் என்றால் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. காக்கை வலிப்பு என்ற பேச்சு வழக்கில் அழைக்கப்படுகின்ற வலிப்புநோய் மூளை சம்பந்தப்பட்ட ஒரு நோயாகும். மூளையிலுள்ள நரம்புக் கலங்களில் ஏற்படுகின்ற மின் அலை மாற்றங்களாலேயே வலிப்பு நோய் ஏற்படுகின்றது.
மூளை நரம்பு செயற்பாடுகள் மற்றும் உணர்வு அனைத்துமே மின் அலைகள் மூலமே நிகழ்கின்றது. இது சீராக இயங்கும்போது ஒருவரது செயற்பாடுகள் யாவும் இயல்பானதாக சீரானதாக இருக்கும். இந்த மின் அலைகளில் மாற்றங்கள் ஏற்படும்போது உடலுறுப்புகளால் இணைந்து செயற்பட முடிவதில்லை. ஒழுங்கற்ற கட்டுப்பாடற்ற மின் அலை மாற்றங்களால் மூளையின் பாகங்கள் அனைத்தும் மாறுபாடாக ஒரே நேரத்தில் இயங்குவதால் கை, கால்கள் வெட்டி இழுத்து வலிப்பு வருகிறது.
வலிப்பு நோயின் அறிகுறிகள்
வலிப்பு நோயில் பல வகையான வெளிப்பாடுகள் இருப்பினும் பரவலாக ஏற்படும் அறிகுறியாக கை, கால், முகம் என்பன வெட்டி இழுத்தல், இறுக்கமடைதல், முழுமையாகவோ பகுதியாகவோ நினைவிழத்தல் ஏற்படும். இது தவிர திடீரென நினைவிழந்து சுய நினைவின்றி தடார் என்று விழுதல், கண் இமைக்காமல் விழித்தல், வாயால் நுரை தள்ளுதல், மலசலம் நினைவின்றி வெளியேறல் என்பன ஏற்படலாம். சிலரில் வலி வரப்போவதற்கான சில அறிகுறிகள் தென்படுவதுண்டு. வாய் மெல்லுதல், உமிழ் நீர் துப்புதல், மாறுபட்ட வித்தியாசமான விநோத நடத்தைகள், மயக்கம் வருவது போன்ற நிலை என்பன சிலரில் அவதானிக்கலாம். அடிக்கடி வலி வருபவர்கள் இம்மாற்றங்களை அவதானித்ததும் தமக்கு வலி வரப்போவதை உணர்ந்து கொள்வர். எனினும் தம்மை சுதாகரித்துக்கொள்ளாமல் தடாரென்று விழுவார்கள். ஒரு சிலரில் சில நிமிடங்கள் நடப்பது எதுவும் தெரியாமல் ஒருவிதமான மந்த நிலையில் இருப்பர்.
முதலுதவி
வலிப்பு நோயாளர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் பதற்றப்படாமல் செயற்பட வேண்டும். நோயாளியின் வெட்டி இழுக்கும் கை, கால் என்பவற்றை இறுக்கிப் பிடித்து அமத்தக்கூடாது. நோயாளியின் உறுப்புகள் பாரமான பொருட்களிலோ சுவர்களிலோ அடிபடாமல் பாதுகாப்பாக படுக்கவைக்க வேண்டும். நோயாளியை ஒரு பக்கம் சரித்து படுக்க வைப்பதன் மூலம் உமிழ் நீர், நுரை போன்றவை வெளியேறுவது சுலபமாகும். சுவாசத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை இது தடுக்கும். துணியை மடித்தோ அல்லது மெல்லிய தலையணையையோ தலைக்கு வைக்கலாம்.
பொதுவாக வலிப்பு நிலை சில நிமிடங்களில் தானாக கட்டுப்படும். சில வேளைகளில் நீடிப்பதுண்டு. அவ்வாறு நீண்ட நேரம் தொடர்ந்து வலித்தால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லலாம். நோயாளர்களின் வலிப்பு நின்ற பின்னரும் அவர்கள் கண் விழித்து இயல்பு நிலைக்கு வர தாமதமாகலாம். பதற்றப்படத் தேவையில்லை. இரும்பைக் கையில் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும் என்பதில் உண்மையில்லை. பற்களுக்கு இடையில் நாக்கு கடிபட்டால் பற்களுக்கிடையில் ஏதாவது பொருட்களை வைக்கலாம். வலிக்கும் அனைவருக்கும் இதை செய்யக்கூடாது. வலிக்கும் நேரத்தில் எந்த மருந்தையும் கொடுக்க வேண்டாம். இதனால் புரையேறி ஆபத்து ஏற்படலாம். வலிப்பு நோயாளருக்கு காற்றோட்டம் அவசியம் என்பதால் நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக்கூடாது. முழு சுயநினைவோடு திரும்பி எழுந்த பின்னரே குடிக்கவோ சாப்பிடவோ கொடுக்கலாம்.
குழந்தைகளில் காயச்சலின் போது வலிப்பு ஏற்படும்போது வாயில் எதையும் கொடுக்கக்கூடாது. ஈரத் துணியால் உடம்பைத் துடைத்து காய்ச்சலைத் தணிக்கலாம். குழந்தைகளில் வலிப்பு நீடித்தால் மலவாசல் ஊடாக மருத்துவர் மருந்துகளை கொடுப்பார். பெரியவர்களில் வலிப்புநோய் நீடிக்கும் போது ஊசி மருந்தை அவசியமெனின் வழங்குவார். குழந்தைகளில் ஏற்படும் வலிப்பு காய்ச்சல் வலிப்பா? அல்லது வலிப்பு நோயா? என்பதை அறிய தலையை, மூளையை ஸ்கான் செய்யலாம். இதன் அடிப்படையில் சிகிச்சையைத் தொடரலாம். ஈ.ஈ.ஜீ. பரிசோதனையும் பாதிப்பை இனங்காண உதவும்.
வலிப்பு நோய்க்கான காரணம்
எதுவித காரணமுமின்றியும் வலிப்புநோய் சிலரில் ஏற்படலாம். பரம்பரை தொடர்பும் நிறுவப்படவில்லை. எனினும் பரம்பரையில் நோயாளிகளை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலான வலிப்பு நோய்கள் ஏதாவது காரணமாகவே ஏற்படுகின்றது. பிரசவத்தின்போது சிசுவின் தலை அதிகமாக அமுக்கப்படுதல், பிறந்த பின்னர் ஏற்படுகின்ற மூளைக் காய்ச்சல், தலையடிபடுதல், மூளையில் கட்டி, மூளையில் புற்றுநோய் என்பவை வலிப்பை ஏற்படுத்தும் பிரதான காரணங்களாகும். பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்படும் சுவாச அடைப்பு, விபத்து, சீனி, உப்பு வகைகளின் அளவில் அதிக மாற்றங்கள் என்பவற்றாலும் வலிப்பு ஏற்படலாம்.
வலிப்பு நோயாளரும் திருமணமும்
வலிப்பு நோயாளர்கள் திருமணம் செய்யக்கூடாது என்ற மூட நம்பிக்கை பரவலாக உண்டு. இது தவறான நம்பிக்கையாகும். வலிப்பு நோயாளர்களின் பாலுணர்விலோ தாம்பத்திய உறவிலோ குறைபாடு ஏதுமில்லை. இவர்கள் தாராளமாக திருமணம் செய்யலாம். குழந்தை பெறலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வைத்திய கண்காணிப்பில் இருப்பது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் பாவிக்கக்கூடாது. வலிப்புநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள் கூட தாம் கருவுற்றதும் இது பற்றி வைத்தியருடன் கலந்தாலோசிக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாம். இதனால் பாதிப்பில்லை.
சிகிச்சை
வலிப்பு நோய் முழுமையாக குணமாக்கக்கூடியது. நீண்டநாள் சிகிச்சையும், தவறாத சிகிச்சையும் பலன் தரும். கடைசியாக வலிப்பு ஏற்பட்டு இரண்டு வருடங்கள் வலிப்பு ஏற்படாத பட்சத்தில் மருத்துவர் சில பரிசோதனைகளின் பின்னர் மருந்தை குறைத்து பின்னர் முழுமையாக நிறுத்துவார். வலிப்பு நோய் ஆவிகள், பேய், பிசாசுகளால் ஏற்படுவதாகும் என்ற மூட நம்பிக்கைகள் இன்று வெகுவாக குறைந்துள்ளது. எனினும் இன்றும் கூட சில வலிப்பு நோயாளர்கள் விழிப்புணர்வு போதாமையினால் தற்கொலை செய்கின்றார்கள். வலிப்பு நோய் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் இருந்தால் மந்திரவாதிகள், ஆவி விரட்டுபவர்களிடம் சென்று அநியாயமாக பணத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை. விஞ்ஞானபூர்வமாக நோய் பற்றிய விளக்கமும் பரிசோதனைகளும் சிகிச்சையும் இருப்பதால் சிகிச்சையைப் பெற்று பூரண குணமடைய முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM