மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியருக்கு பிணை வழங்க வேண்டாமென்பதுடன், அவருக்கு அதிக பட்சத் தண்டணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுடர் ஒளி மாதர் அபிவிருத்திச் சங்கமும் பொதுமக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை அப்பாடசாலையில் கடமையாற்றுகின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த ஆசிரியர் கடந்த 26ஆம் திகதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், குறித்த ஆசிரியரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் மீண்டும் ஆஜர்படுத்தியபோதே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த ஆசிரியரை வேறு பாடசாலைக்கு இடமாற்றாமல் அவரை ஆசிரிய சேவையிலிருந்து இடைநிறுத்த வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

(ஜவ்பர்கான்)