முதற்தர கழகங்களுக்கிடையிலான டயலொக் கேடய றகர் சுற்றுப் போட்டியில் கண்டி விளையாட்டுக் கழகம் இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 61 - 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றி கொண்டது. 

கண்டி நித்தவலை மைதானத்தில் நேற்று (30) மாலை இப்போட்டி ஆரம்பமானது. போட்டி ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களில் கண்டி வீரர் ஒருவர் இழைத்த தவறு காரணமாக பொலிஸ் அணிக்கு வழங்கப்பட்ட பெனல்டி மூலம் 3-0 என புள்ளிப் பதிவு ஆரம்பமானது.

இருப்பினும் சொற்ப நேரத்துக்குள் கண்டி அணி வீரர் நைஜில் ரத்வத்தை வைத்த ட்ரை மற்றும்  அதற்காக மேலதிகப் புள்ளியை திலின விஜேசிங்க பெற்றுக் கொடுக்க  7-3 என்ற அடிப்படையில் கண்டி மீண்டது.

மிகவும் சவாலான கோணத்தில் இருந்து திலின விஜேசிங்க இலக்குத் தவறாது மேற்படி  மேலதிகப் புள்ளியைப் பெற்றுக் கொடுத்தார்.

இப்போட்டியில் கண்டி அணி மொத்தம் 9 ட்ரைகளை வைத்ததுடன் அதில் 7க்கான மேலதிகப் புள்ளிகளையும் பெற்றுக்கொண்டதன் மூலம் 61 புள்ளிகளைப் பெற்றது. 

அதேநேரம் பொலிஸ் விளையாட்டுக் கழகம் 2 பெனல்டி, இரண்டு ட்ரை, அவற்றுக்கான மேலதிகப் புள்ளிகள் மூலம் 20 புள்ளிகளைப் பெற்றது.