காலியில் கப்பம் கோரி வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வர்த்தகர் கடந்த 21ஆம் திகதி காலியில் வைத்துக் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க 400 இலட்ச ரூபாவை கப்பமாகச் செலுத்துமாறு வர்த்தகரின் உறவினர்களுக்கு கடத்தல்காரர்கள் நிபந்தனை விதித்தனர்.

எனினும் அவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியாது என்று உறவினர்கள் கூறியதையடுத்து, பேரம் 50 இலட்சத்துக்குப் படிந்தது.

அதன்படி, ஐம்பது இலட்ச ரூபாவைப் பெற்றுக்கொண்ட கடத்தல்காரர்கள், வர்த்தகரை காலி - பிலான பகுதியில் வீடு ஒன்றின் முன் தள்ளிவிட்டுச் சென்றிருந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வந்த காலி பொலிஸார், கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.

கப்பமாகப் பெறப்பட்ட 50 இலட்ச ரூபா மாத்தளையில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் வெளியானது. இதையடுத்து அந்தப் பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இதேவேளை, தலைமறைவாகியுள்ள மாத்தளை வீட்டின் உரிமையாளரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.